சென்னை, செப்.2 (டிஎன்எஸ்) இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பதிவு செய்தல், புதுப்பித்தல், வேலைக்காகப் பரிந்துரைத்தல் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுநாள்வரை இப்பணிகள் அனைத்தும் மனுதாரர்கள் நேரில் அணுகி பயன் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரடியாக வருகைபுரிவதைத் தவிர்க்கும்பொருட்டும் இன்றைய தொழில் நுட்ப வசதிக்கேற்ப அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் வழியாக பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் செய்யும் வகையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் கணினி வழியாக ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் இத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தின் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வலைபின்னல் (நெட்வொர்க்) வாயிலாக இணைப்பதன் மூலம் அலைச்சல், காலவிரயம், உணவு மற்றும் பயணச் செலவு பதிவுதாரர்களுக்குத் தவிர்க்கப் பெறும். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகள் சீர்செய்யப்பட்டு மக்களுக்கான சேவைத்திறன் செம்மைப்படுத்தப்படுகிறது. மேலும், ஆன்லைன் மூலம் பதிவு மற்றும் இதரப்பணிகளை மிகக் குறைந்த செலவில் தங்களின் இருப்பிடத்திலேயோ அல்லது மக்கள் சேவை மையங்களிலேயோ ஆன்லைன் மூலம் பதிவு மற்றும் இதர வேலைவாய்ப்பகச் சேவைகளையும் மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளலாம். இதற்கெனப் பதிவுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் நெடுங்தொலைவு பயணம் மேற்கொண்டு வேலைவாய்ப்பகத்திற்கு வருகைபுரியும் அவசியம் இல்லை. எனினும், விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் வந்தும் தமது பணிகளை முன்பிருந்தவாறு செய்து கொள்ளலாம். தங்களின் முதுநிலைப் பற்றிய விவரங்களை பதிவுதாரர்கள் அவ்வப்போது தெளிவாக இணையதளத்தினைப் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வலைப் பின்னல் (Net Working) முறையில் கணினிமயமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 01.09.2010 முதல் 14.09.2010 வரையிலான காலத்தில் துறை சர்வருக்குள் உட்செலுத்தப்படும் விவரப் பதிவுகளைச் சரிப்பார்த்து, சோதனை ஓட்டம் (Testing and trial run) மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மேற்படி பணிக்கென அனைத்து வேலைவாய்ப்பக பணிகளான பதிவு செய்தல் (Registration), பதிவுகளைப் புதுப்பித்தல் (Renewal), இன்றைய நிலைக்கேற்ப விவர மாற்றம் செய்தல் (Updation of data) முகவரி மாற்றம் (Change of Address), நியமனங்கள் (Nominations) போன்றவற்றை 01.09.2010 முதல் 14.09.2010 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்துப் பதிவுதாரர்களின் விவரங்களும் வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் முழுமைப்படுத்தப்படும் பணி முடிவுற்றவுடன் இணையதளத்தில் உட்செலுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அவரவர் அளவில் சரிபார்த்து அதனில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் பதிவுதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை நேரில் அணுகி மூன்று மாத காலஅவகாசத்திற்குள் சரிசெய்து கொள்ளலாம். இத்திட்டம் ரூ.5.02 கோடி செலவில் எல்காட் நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் வாலாயப் பணியான பதிவுசெய்தல் பணியினை 15.09.2010 முதல் இணைதளம் வழியாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்களை நேரில் அணுகியோ மேற்கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பகங்களின் இணையதள முகவரி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் திரு ஆ.சு. ஜீவரத்தினம், இ.ஆ.ப. தெரிவித்தார். (டிஎன்எஸ்).
No comments:
Post a Comment