Sunday, September 5, 2010

சாஃப்ட்வேர் எஞ்சினியரின் பதிலுரை..

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.ஆகவே, இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன் தான். அதிக சம்பளம் வாங்குகிறேன். விலைவாசியை உயர்த்தினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன், இப்படியெல்லாம்.

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

அதிக சம்பளம் வாங்கினேன். சாஃப்ட்வேர் கம்பனியே கூடாது என்பதற்காக அல்ல. சாஃப்ட்வேர் கம்பனிகள் திறமையற்றவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக.

சரவனபவனை விட்டு டாமினோசுக்கு ஓடினேன்.சரவனபவனே இருக்ககூடாது என்பதால் அல்ல, சரவணபவனில் பீட்சா கிடைக்காத காரனத்தால்

உனக்கேன் இவ்வளவு அக்கரை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் - அதைப் போல. என்னைக் குற்றவாளி குற்றவாளி என்கிறார்களே,இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்.


கேளுங்கள் என் கதையை, நீதிபதி அவர்களே, தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டில், ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. சாப்ஃட்வேர் எஞ்சினியர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ஐதராபாத் அது என் ஐகியூவை வளர்த்தது. என்னை உயர்ந்தவனாக்கியது.

இந்திய நாட்டை உயர்த்த வந்தேன். அதில் வெற்றிபெற்று உங்கள் முன் நிற்கிறேன். இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறானே இந்த ஜாலக்காரன் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ் அதிகாரி. இவன் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். வருடக்கணக்கில் இவன் முன் கியூவில் நின்றேன். எப்போதும் நோவேகன்சி என்றே சொல்லிவந்தபோதும் வேகன்சிவரும் என நம்பி என் கார்டை ரென்யூ செய்தேன். கடைசியில் பைத்தியமாக மாறினேன்.


காண வந்த தங்கையை கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம், கல்யாண வயதில் வரதட்சிணைக்கு நிற்கும் பெண்னாக. தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால்,வரதட்சிணை தராமல் அவளுக்கு கல்யாணமாகவில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழியும் அபாயம் நேர்ந்துவிட்டது. அப்பா வயலில் வெள்ளாமையில்லை. விளைந்த நெல்லை வாங்க ஆளுமுமில்லை.அம்மா கண்களிலே நீர். என் குடும்பம் அலைந்தது. என் குடும்பத்துக்காக நானும் அலைந்தேன்.

என் குடும்பத்துக்கு கருணை காட்டினர் பலர். அவர்களிலே மார்வாடிகள் சிலர் என் வீட்டை கேட்டனர். டொனேஷன் வாங்கி எஞ்சினியரிங் சீட்டு கேட்கும் வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் சுயநிதிகல்லூரி மேலாளர். இவன் என்னிடம் அறுபதாயிரம் டொனேஷன் கேட்டான். அதை கொடுத்திராவிட்டால் நான் இன்று டாஸ்மாக் கடையில் மானேஜராகத்தான் இருந்திருக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகள் எங்களுக்கு கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக லஞ்சம் கேட்டனர். அவர்களின் வலையில் விழுந்த பட்டதாரிகளும் லஞ்சம் கொடுத்தனர்.நாட்டுக்கு துரோகம் செய்தனர். அதில் தலையானவன் எங்கள் ஊர் எம்.எல்.ஏ
டாஸ்மாக் கடையில் வேலைவாங்கித்தர ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறான். ஜானிவாக்கரின் பெயரால், ஒல்ல்ட்மாங் ரம்மின் பெயரால். நான் ஐம்பதாயிரத்தை கொடுத்து கூட வேலையில் சேர்ந்திருப்பேன்.ஆனால் ஐம்பத்திஐந்தாயிரம் கொடுத்த இன்னொருவனுக்கு அந்த வேலையை கொடுத்தது இந்த எம்.எல்.ஏதான்.

அறுபதாயிரம் கொடுத்தால் இன்னொரு டாஸ்மாக் கடையில் வேலை தருவதாக என்னிடம் சொன்னான். ஆனால் அறுபதாயிரம் கொடுத்து டாஸ்மாக் மேனேஜராக ஆவதை விட அறுபதாயிரம் டொனேஷன் கொடுத்து எஞினியரிங் சீட் வாங்கிவிடலாம் என்று எண்ணி நான் சாஃப்ட்வேர் எஞினியராகி ஆஃப்ஷோர் வந்துவிட்டேன்.

ஆஃப்ஷோர் போவது விந்தையல்ல,அதிகம் சம்பாதிப்பதும் விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர். அவரே வாலிபவயதில் இங்கிலாந்து போயிருக்கிறார். ஐம்பது பவுண்டுக்கு பர்கர் சாப்பிட்டிருக்கிறார். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறேன் நான். இது எப்படி குற்றமாகும்?

தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் பிறந்த இளைஞனுக்கு வேலையில்லை, வெட்டியில்லை,லஞ்சம் தராமல் படிப்பில்லை,வேலையுமில்லை. ஆனால் நான் லஞ்சம் கொடுத்திருந்தால், டாஸ்மாக் கடையில் ஏழுவருடம்,என் அப்பா வயலில் ஆறுவருடம்- இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.இதைத் தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

வேலை இல்லா திண்டாட்டம் என்னை மிரட்டியது. பயந்து ஓடினேன். அரசியல்வாதி கேட்ட லஞ்சம் என்னை துரத்தியது. மீண்டும் ஓடினேன். தங்கை கல்யாணத்துக்கு வேண்டிய வரதட்சினை பணம் என்னை துரத்தியது. அப்பாவை சாகுமுன் காரில் ஏற்றி சொந்த வீட்டில் குடியேற்ர வேண்டும் என்ர ஆசை என்னை துரத்தியது. ஓடினேன்,ஓடினேன் சாஃப்ட்வேர் வேலை கிடைக்கும் வரை ஓடினேன். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா? வாழவிட்டார்களா என்னை?

எதிர்கட்சி வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
யார் வழக்கிற்குமில்லை. அதுவுமென் வழக்குதான். என் குடும்பத்தின் வழக்கு. வேலை தர லஞ்சம் கேட்ட மாபாவிக்கு புத்தி புகட்ட முன்னாள் மாணவன் வாதிடுவதிலென்ன தவறு?

அதிக சம்பளம் வாங்குவது ஒரு குற்றம். விலைவாசி ஏறியது ஒரு குற்றம்.நான் 200 ரூபாய்க்கு பீட்சா சாப்பிடுவது ஒரு குற்றம்.
இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்?
வேறுதுறைகளில் வேலை கிடைக்காமல் அலையவிட்டது யார் குற்றம்?
விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?
சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்றாலே வீட்டுவடகையை உயர்த்தும் ஓனர்களின் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?

சாஃப்ட்வேரின் குற்றமா? அல்லது சாப்ட்வேர் இல்லமாலேயேயே அதிக வாடகையை கனக்கிட தெரிந்த ஹவுஸ் ஓனர்களின் குற்றமா?
சரவணபவனில் ஐந்து ரூபாய்க்கு பீட்சா கிடைக்காதது யார் குற்றம்? அண்ணாச்சியின் குற்றமா? அல்லது அண்ணாச்சியை கைது செய்து உள்ளே தள்ளிய போலிஸின் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும்வரை வீட்டுவாடகையும், விலைவாசிகளும் குறையப்போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம்.
பகுத்தறிவு.
பயனுள்ள அரசியல் தத்துவம்.

No comments:

Post a Comment