Friday, September 3, 2010

பகிரங்கக் கொந்தளிப்பு கடிதம்.

பகிரங்கக் கொந்தளிப்பு கடிதம்...

"மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல்
பதவி வழங்கப்பட்டது. அவரை ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் நியமனம்
செய்தார்..." என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் கேட்டபோது
ஆச்சரியப்பட்டேன். அதேநேரத்தில் பயங்கர அதிர்ச்சிக்கும், மன
உளைச்சலுக்கும் ஆளானேன்!

அப்படி என்ன செய்துவிட்டார் மோகன்லால்..!?

மேகன்லால் மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர். பலவிதமான
கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். மாநில
மற்றும் தேசிய அளவிலான விருதுகளையும் குவித்தவர். ராணுவ அதிகாரியாக சில
படங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். இதில் எனக்கு எந்தவிதமான
மாற்றுக் கருத்தும் இல்லை. அவரது படங்கள் பல நானும் ரசித்து
பார்த்திருக்கிறேன்.

ஆனால், இரண்டே இரண்டு திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்ததை மட்டும்
வைத்து ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்டிருந்தால், அதை என்னைப்
போன்றவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

வெறும் இரண்டே படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்து விட்டு, அவற்றில் ஒரு
சில பிஸ்கோத்து தீவிரவாதிகளை மட்டும் டம்மி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற
மோகன்லாலுக்கு கொடுக்கும்போது, என்னால் விம்மி அழாமல் இருக்க
முடியவில்லை!

காரணம்...??!!???

சினிமா உலகில் கால் வைத்ததிலிருந்தே, ஏறத்தாழ அனைத்துப் படங்களிலும்
ராணுவ அதிகாரியாக / போலீஸ் அதிகாரியாக நேர்மையாக நடித்தவரும்,
கன்னியாகுமரியிலிருந்து, காஸ்மீரு வரை அத்தனை தீவிரவாதிகளையும்
சுட்டுக்கொன்றும், உயிருடன் பிடித்தவருமான நமது புரட்சிக் கலைஞர் கேப்டன்
விஜயகாந்த்தை, இந்திய ராணுவம் கெளரவிக்காதது ஏன்?

விஜயகாந்த் இடத்தை மோகன்லாலால் ஏணி வைத்தாலும் நெருங்க முடியாது என்பது
மழலைகளுக்கும் தெரிந்த ஒன்று!

வெள்ளித்திரையில் காக்கிச் சட்டையும், மிலிட்டிரி ட்ரெஸ்சும் மாட்டிக்
கொண்டு விஜயகாந்த் செய்த சாதனைகள் தான் எத்தனையெத்தனை?????

இந்த நேரத்திலே ஒரு சில சாதனைகளை சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். இது,
இந்திய ராணுவத்தை மட்டுமின்றி, அமெரிக்க ராணுவத்துக்கும் விடுக்கப்பட்ட
அறைகூவலாக எடுத்துக் கொள்ளலாம்!

1) கடந்த 30 வருஷத்துக்கும் மேலாக நமது பொதுச் சொத்தான சந்தன மரங்களைக்
கடத்தியும், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை எடுத்தும் கடத்தல் செய்து
வந்தவன் சந்தனக்கடத்தல் காரன்
 வீரப்பத்திரன். அவனைப் பிடிக்க பல போலீஸ் அதிகாரிகள் போனபோது இரக்கமற்று
அவர்களை சுட்டுக்கொன்று காட்டுராஜாவாக வாழ்ந்து வந்த கடத்தல் மன்னன்
வீரபத்ரனை "கேப்டன் பிரபாகரனாக" தனியாக நின்று சண்டைபோட்டு உயிருடன்
பிடித்து வந்தவர் யார்? மோகன்லாலா...? இல்லை நமது கேப்டன்!!!

2) இளம்பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, பின்பு அவர்களது
உடல் உறுப்புக்களை எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்தல் செய்து வந்த கொள்ளைக்
கூட்டத்தை மொத்தமாக "புலன் விசாரனை" செய்து தனியாக நின்று பந்தாடி
கூண்டோடு அழித்து பல அவார்டுகளை குவித்தவரின் பெயர் என்ன மோகன்லாலா...?
இல்லை நமது கேப்டன்!!!

3) பாகிஸ்தானில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி, அப்பாவிப்
பொதுமக்களைக் கொன்று குவித்து, நமது நாட்டை சீரழிக்க நினைத்து, இறுதியில்
பள்ளிச் சிறுவர்களைக் கடத்தி வைத்து தப்பிக்க நினைத்தார்கள்
பயங்கரவாதிகள்... இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகி பிரதமரே முடிவெடுக்க
முடியாமல் இருக்கும் போது, அரசாங்கத்து தெரியாமலே தீவிரவாதிகளின்
இருப்பிடத்துக்குள்ளேயே சிங்கம் போல சென்று தீவிராவாதிகளை ஒழித்து, அதன்
தலைவன் வாசீம் கானை இரண்டு காலாலேயே கழுதை போல் உதைத்து, அபார வீரன்
"சேதுபதி IPS" என்று பெயரெடுத்தாரா மோகன்லால்..? இல்லை நமது கேப்டன்!!!

4) "மாநகரகாவல்" நிலையத்தில் இருந்து "திருமூர்த்தி"யாக வலம் வந்து நமது
நாட்டின் இரண்டு பிரதமர்களை இரு வேறு தருணங்களில் குண்டு வைத்து கொல்ல,
அயல்நாடுகளின் உத்தரவின் பேரில் செயல்பட்ட கூலிப்படையை கூண்டோடு கைலாயம்
அனுப்பினாரே... அந்த மாவீரனா இந்த மோகன்லால். இல்லை நமது கேப்டன்!!!

5) தினமும் ஒருவேளை சோற்றுக்கு நமது மக்கள் அவதிப்படும்போது, மக்களுக்காக
அராசங்கத்தால் வரும் ஒரு ரூபாய் ரேஷன் அரிசிகளை மொத்தமாக சுருட்டிய
கூட்டத்தை, அவருக்கு தெரியாத அயல் மாநிலங்களில் உள்ள கடத்தல்
தீவிரவாதிகளின் கூடாரத்துக்குள்ளேயே சென்று தவிடுபொடியாக்கி, நமது 100
கோடி மக்களின் பசியை தீர்த்து வைத்த 'தேவனா' இந்த மோகன்லால்..? இல்லை
நமது கேப்டன்!!!

6) இந்தியாவின் எந்த ஓர் ஆட்சியாலும் அதிகாரத்தாலும் ஒழித்திட முடியாத
லஞ்சத்தை, ஒற்றை 'ரமணா'வாக அவதராமெடுத்து மறுஒலிபரப்பு மலர்ச்சியை
ஏற்படுத்திய அனுபவம் உண்டா மோகன்லாலுக்கு?... இல்லை நமது கேப்டனிடம்
உண்டு.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச் சாதனைகளின் எண்ணிக்கை
மோகன்லாலின் வயதைத் தாண்டினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

அத்தகைய இந்திய தேசத்தின் காவலனான கோடம்பாக்கத்திலே வலம் வந்த கேப்டனை,
ராணுவம் கெளரவிக்காமல் புறக்கணித்தது, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்
பெருங்களங்கம்!

இந்த நேரத்திலே ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்... அமெரிக்க
அரசாங்கமே... விழித்துக் கொள்... எங்கள் கேப்டனின் மகத்துவதை நீயாவது
அறிந்து செயல்படு!!!!!

இப்படிக்கு,
கதறலுடன்,
கேப்டன் ரசிகன்

No comments:

Post a Comment